Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா

சிவகிரி, ஜூன் 24: வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் (எ) சிந்தாமணி நாதர் கோயில் உள்ளது. சிவபெருமான் உமையொரு பாகனாக உருவம் தரித்து பக்தர்களுக்கு அருள் வழங்கும் திருத்தலங்கள் தமிழகத்தில் இரண்டு உள்ளது அந்த தலங்களுக்குள் வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஒன்று ஆகும். பழமை வாய்ந்த இக்கோயிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு ஆனி திருவிழா கடந்த 13ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 9ம் திருநாளான தேரோட்டம் கடந்த 21ம்தேதி கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

10ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் நிறைவு நாள் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி கனக பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது.மாலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகன சப்பரத்தில் அர்த்தநாரீஸ்வரர் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வந்தார். இரவு 10 மணி அளவில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அம்மையப்பன் எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை வலம் வந்தார்.

நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் எஸ்டி கல்வி குழுமம் தலைவர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்டி.முருகேசன், பேரூராட்சி தலைவர் லாவண்யா, கோயில் செயல் அலுவலர் கார்த்தி லட்சுமி, தக்கார் முருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் தவமணி, அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், அனைத்து சமுதாய மண்டகப்படிதாரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் கண்மணி தலைமையில் போலீசார் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலர் கருப்பையா, முருகன் மாடசாமி, ராஜா ஆகியோர் செய்தனர்.