சங்கரன்கோவில், செப்.29: சங்கரன்கோவிலில் நகை பட்டறையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சங்கரன்கோவில் சுந்தரர் தெருவில் நகை பட்டறை வைத்து நடத்தி வருபவர் ராமச்சந்திரன் மகன் சங்கரசுப்பு (56). இவர் கடந்த 5ம் தேதி நகை பட்டறையை அடைத்து விட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளார். நகை பட்டறையில் 5 கிராம் எடையுள்ள பேபி கை செயின் மற்றும் நகை வேலைக்கு பயன்படுத்த 15 கிராம் எடையுள்ள உதிரி தங்கத்தை வைத்து விட்டு வந்துள்ளார். மறுநாள் காலை சென்று பட்டறையை திறந்து நகை வேலை பார்ப்பதற்கு தங்கத்தை தேடியுள்ளார். இதில் தங்கம் திருடுபோய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைதொடர்ந்து நகை பட்டறையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்துள்ளார். அப்போது அதிகாலை 1 மணியளவில் நகை பட்டறை பின்புறம் உள்ள கதவை திறந்து மர்ம நபர்கள் சிசிடிவியை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, பட்டறைக்குள் புகுந்து தங்கத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும். இது குறித்து சங்கரசுப்பு அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகை பட்டறையில் கடந்த மே மாதம் 30 கிராம் நகை கொள்ளை போனது. இதையடுத்து பட்டறையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் சிசிடிவி கேமராவை ஆப் செய்து மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+
Advertisement