Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தென்காசி நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

நெல்லை, ஜூலை 25: ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்ட நீர்நிலைகளில் திரளானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இறந்த முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடுவது இந்துக்களின் ஐதீகம். அந்தவகையில் ஆடி அமாவாசை தினமான நேற்று நெல்லை, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் திரளானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

விகேபுரம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசத்தில் அதிகாலை முதல் குவிந்த திரளானோர் சாரல் மழை பெய்தபோதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். இதையொட்டி உலகம்மை சமேத பாபநாசம் சுவாமி கோயிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தர்ப்பணம் செய்த பக்தர்கள் கோயிலுக்கு சென்று சுவாமி-அம்பாளை தரிசித்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு தீர்த்தவாரி வைபவம் நடந்தது. இதையொட்டி சுவாமி- அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

இதை திரளானோர் தரிசித்தனர். இதனிடையே கோயில் வளாகத்தில் சமூக ஆர்வலர் கிரிக்கெட் மூர்த்தி பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக மைக் மூலம் பிரசாரம் செய்தார். ஆடி அமாவாசையை முன்னிட்டு டாணா பகுதியில் தனியார் வாகனங்கள் மற்றும் டூவிலர்கள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து நடந்தே கோயிலுக்கும், தாமிரபரணி ஆற்றுக்கும் பக்தர்கள் சென்றனர். அரசு பஸ்கள் மட்டும் பாபநாசம் கோயில் மற்றும் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கூடங்குளம்: ஆடி அமாவாசையை முன்னிட்டு கூடங்குளம் அருகே புகழ்பெற்ற விஜயாபதி கடற்கரையில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்துடன் வந்து தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபாடு செய்தனர். தொடர்ந்து அருகில் உள்ள விசுவாமித்திர மகாலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டு ஏழைகளுக்கு தானம் கொடுத்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் வில்சன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

தென்காசி: பொதுவாக குற்றாலம் மெயின் அருவியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசைகளில் அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இந்த ஆண்டு குற்றாலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் அருகில் உள்ள நீர் நிலைகளை தேடி தர்ப்பணம் கொடுத்தனர். தென்காசி ஆனைப்பாலம் சிற்றாறு, இலஞ்சி குமாரர் கோயில் பின்புறம் உள்ள சிற்றாறு பகுதிகளில் எள், பிண்டம் வைத்து முன்னோர்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

குற்றாலம் மெயினருவியில் ஒரு சிலர் தர்ப்பணம் கொடுத்தனர். குற்றாலம் மெயினருவியில் வழக்கமாக ஏராளமான புரோகிதர்கள் வந்திருந்து தர்ப்பணம் கொடுக்கும் நிலையில் நேற்று மெயினருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் குறைவான அளவில் புரோகிதர்கள் வந்திருந்தனர். மேலும் தர்ப்பணம் கொடுப்பதற்கு பொதுமக்களும் குறைவாகவே வந்தனர். அருவியில் குளிக்க தடை காரணமாக வீடுகளில் குளித்துவிட்டு மெயினருவி பகுதியில் உள்ள புரோகிதர்களிடம் சென்று தர்ப்பணம் கொடுத்தனர்.

கடையநல்லூர்: இதனிடையே கடையநல்லூர் அடுத்த கருப்பாநதி பெரியநாயகம் கோயில் ஆற்றுப்பகுதியில் தர்ப்பணம் கொடுப்பதற்காக நேற்று அதிகாலை முதலே ஏராளமானோர் குவிந்தனர். ஆற்றில் புனித நீராடி அங்கிருந்த அர்ச்சர்களிடம் அரிசி, எள் கரைத்து தர்ப்பணம் கொடுத்தனர். இந்நிலையில் நேற்று பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுக்க பைக் மற்றும் கார்களில் வருகை தந்ததால் கோயிலுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் அருணாசலபாண்டியன் கூறுகையில் ‘‘திரிகூடபுரத்தில் இருந்து பெரியசாமி அய்யனார் கோயில் வரை சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் கோயிலுக்கு செல்லும் பாதையில் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்ததையடுத்து குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் அளவீடு செய்து சர்வே செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள இடங்களையும் முழுமையாக சர்வே செய்து பக்தர்களின் வசதிக்காக இருவழிச்சாலையாக மாற்றினால் வரும் காலங்களில் போக்குவரத்திற்கு தீர்வு கிடைக்கும்’ என்றார்.