Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அன்னாபிஷேக விழாவையொட்டி 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் அண்ணாமலையார் கோயிலில் வரும் 4ம் தேதி

திருவண்ணாமலை, அக்.31: திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா வரும் 4ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, பிரசித்தி பெற்ற அன்னாபிஷேக விழா வரும் 4ம் தேதி மாலை நடக்கிறது. அதையொட்டி, கோயில் நிர்வாகத்தின் சார்பில், பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தரிசன நேரம் மற்றும் தரிசன வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, அன்று மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்துக்கு அனுமதியில்லை. மாலை 6 மணிக்கு பிறகு, அன்னாபிஷேகத்தை பக்தர்கள் தரிசிக்கலாம். சுவாமிக்கு அன்னம் சாத்தும்போது, பக்தர்கள் தரிசனம் செய்வது மரபு கிடையாது என்பதால், 3 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

மேலும், நீண்ட நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, ராஜகோபுரம் வழியாக ஒற்றை வழி வரிசை நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல, அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மட்டும் அனுமதிக்கப்படும். பவுர்ணமி என்பதால், கட்டண தரிசனமும் இல்லை. இந்நிலையில், ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம், வரும் 4ம் தேதி இரவு 9.37 மணிக்கு தொடங்கி, 5ம் தேதி இரவு 7.20 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 4ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்ததாகும். ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு சிறப்பு ஏறபாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கிரிவல பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.