சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபக்கு வலை வந்தவாசியில் பரபரப்பு இன்ஸ்டாகிராம் மூலம் மலர்ந்த காதல்
வந்தவாசி, அக்.31: வந்தவாசி அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா, தேவிகாபுரம் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பள்ளி படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்துள்ளார். இவருக்கும் வந்தவாசி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 28 வயது வாலிபருக்கும், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதில் இருவரும் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சிறுமிக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து வந்தவாசி மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி போக்சோவில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
  
  
  
   
