சேத்துப்பட்டு, அக்.30: சேத்துப்பட்டு அருகே முறையான மருத்துவம் படிக்காமல் கிளீனிக் நடத்தி 10 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் பஜார் வீதியில் முறையான மருத்துவம் எதுவும் படிக்காமல் போலி டாக்டர் ஒருவர் கிளீனிக் நடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மருத்துவ அலுவலர் நந்தினி தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பெரிய நாயகியம்மன் கோயில் சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள ஒரு கிளீனிக்கில் சோதனை செய்தபோது, ஆரணி புலவன்பாடி பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(40) என்பவர் எலக்ட்ரோ ஹோமியோபதி படித்து விட்டு, நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது.
மேலும், அவர் கடந்த 10 ஆண்டுகளாக கிளீனிக் நடத்துவதும், தினமும் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுவதும் தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள், கிளீனிக்கில் இருந்த அலோபதி மருந்துகள், ட்ரிப்ஸ் பாட்டில்கள், ஊசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், இதுகுறித்து மருத்துவ அலுவலர் நந்தினி சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து போலி டாக்டர் வெங்கடேசனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
