பெரணமல்லூர், ஆக.30: பெரணமல்லூர் அருகே செல்லும் வந்தவாசி-ஆரணி நெடுஞ்சாலையில் வாழைப்பந்தல் கூட்ரோடு முக்கிய இணைப்பு சாலையாக இருந்து வருகிறது. இந்த கூட்ரோடு வழியாக செய்யாறு, காஞ்சிபுரம், சென்னை செல்லவும், பிரசித்திபெற்ற ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயில் மற்றும் முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். தொடர்ந்து தமிழக முதல்வரின் சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு நிதி திட்டத்தின்கீழ் வாழைப்பந்தல் கூட்ரோடு பகுதியில் புதிய ரவுண்டானா அமைக்க சுமார் ரூ.1.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ரவுண்டானா அமைப்பதற்காக சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது விரிவாக்கப்பட்ட ரவுண்டானா சாலை பகுதிகளில் தார் சாலை போடும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. இப்பணிகளை வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராமச்சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது பணிகள் தரமாகவும், விரைவாகவும் முடிக்கும்படி உத்தரவிட்டார்.
+
Advertisement