பெரணமல்லூர், ஆக.30: பெரணமல்லூர் அருகே நடந்த மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற பனையம்மன், மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5ம்தேதி மாரியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து விழாவில் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் இரவில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் மாலை 4 மணியளவில் பக்தர்களின் முழக்கத்துடன் மாரியம்மனை வண்ண பூக்களால் அலங்காரம் செய்து தேரில் வைத்து வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர், கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
+
Advertisement