செய்யாற்றில் சிவசுப்பிரமணிய சுவாமி தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனிதநீராடினர் கலசபாக்கம் அருகே கந்த சஷ்டியையொட்டி
கலசபாக்கம், அக். 29: கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கிரி மலையில் உள்ள சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 22ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடந்தது. இதனை தொடர்ந்து வன்னியனூர் பேட்டை காங்கேயனூர் புதுப்பாளையம் வழியாக தீர்த்தவாரியில் பங்கேற்க குருவிமலை வந்தபோது கிராமங்கள் தோறும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று குருவிமலை கிராமத்தில் செய்யாற்றில் நடைபெற்றது. திரளான பக்தர்கள் புனிதநீராடினர். பின்னர் உற்சவமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு பெரியநாயகி சமேத கரைகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை குருவிமலை கிராமத்தில் இருந்து உற்சவமூர்த்திகள் புறப்பட்டு கலசபாக்கம் பூண்டி மோட்டூர் வழியாக மீண்டும் நட்சத்திரகிரியை வந்தடைந்தனர். அப்போது திரளான பக்தர்கள் தீபாரதனை செய்தனர். இதேபோல் கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் உள்ள பாலாம்பிகை சமேத பாலகிரீஸ்வரர் கோயிலில் விழாவில் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு சூரசம் ஹாரம் நடந்தது. பின்னர் உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. நேற்று காலை கலசபாக்கம் செய்யாற்றில் பழங்கோயில் கிராமத்தில் சுவாமி முருகப்பெருமானுக்கு தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா அரோகரா என பக்தி முழக்கத்துடன் புனிதநீராடினர்.
