கலசப்பாக்கம், ஆக.29: பர்வதமலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் பர்வதமலையில் சிவன் கோயில் உள்ளது. இப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவது மற்றும் விலை மதிப்பில்லாத மூலிகைகளை தீயிட்டு கொளுத்தும் சம்பவங்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று பர்வதமலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் ஒருவர் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அவரை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அதில், ஜவ்வாதுமலை ஒன்றியம் குட்டைக்கரை பகுதியை சேர்ந்த செல்வராஜ்(40) என்பதும் வனவிலங்குகளை வேட்டையாட இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து செல்வராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement