கல்குவாரி குட்டையில் மூழ்கி சாமியார் பலி அழுகிய நிலையில் சடலம் மீட்பு திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே
திருவண்ணாமலை, ஆக.29: திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சாமியார் பலியானார். அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி உள்ளது. கல்குவாரி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் நேற்று மிதந்தது. இதுகுறித்து, அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், திருவண்ணாமலை தாலுகா போலீசார் நேரில் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். குட்டையில் மூழ்கி இறந்து 2 நாட்களுக்கு மேலானதால் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. கரையின் மீது வைத்திருந்த சட்டை பையில் இருந்த அடையாள அட்டையில், இறந்த நபரின் பெயர் தேவராஜ்(39) என்பதும், கிரிவலப்பாதையில் உள்ள தயாபரன் துறவியார் மடத்தில் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்த சாமியார் என்பதும் தெரியவந்தது. இது தொடர்பாக, அடி அண்ணாமலை கிராம நிர்வாக அலுவலர் சங்கர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.