வினாடிக்கு 1400 கன அடி உபரி நீர் வெளியேற்றம் 3 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி சாத்தனூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து
திருவண்ணாமலை, செப். 27: சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து நீடிப்பதால் அணையில் இருந்து வினாடிக்கு 1400 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது சாத்தனூர் அணை. இந்த அணையின் பாசனத்தை நம்பி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெறுகிறது. அது தவிர, மூன்று மாவட்டங்களிலும் 88 ஏரிகள் மற்றும் திருக்கோவிலூர் பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ஆகியவை சாத்தனூர் அணையை நம்பியே உள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கும் முன்பே வெப்பச்சலனம், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கோடை மழை என அடுத்தடுத்து மழை பெய்தது. அதனால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டமான 119 அடியில், நேற்று மாலை நிலவரப்படி 114.25 அடி நிரம்பியிருக்கிறது. அணையின் மொத்த நீர் கொள்ளளவான 7321 மில்லியன் கன அடியில் தற்போது 6284 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. இது அணையின் மொத்த நீர்இருப்பில் இது 85.84 சதவீதமாகும். மேலும், கிருஷ்ணகிரி அணை முழு கொள்ளளவை எட்டியதால் அதிலிருந்து தென்பெண்ணை வழியாக உபரி நீர் தொடர்ந்து திறக்கப்படுகிறது.
எனவே, சாத்தனூர் அணைக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடிக்கிறது. நேற்று மாலை நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1400 கன அடியாக உள்ளது. எனவே, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரிநீராக தென்பெண்ணை ஆற்றின் வழியே வெளியேற்றப்படுகிறது. அதன்படி, அணையில் இருந்து வினாடிக்கு 1400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வட கிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்த பிறகே அணை நிரம்புவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே அணையின் நீர்மட்டம் 114 அடியை கடந்துள்ளது. எனவே, இந்த ஆண்டு முன்கூட்டியே அணை முழுமையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது. அதனால், திருவண்ணாமலை உள்ளிட்ட மூன்று மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.