திருவண்ணாமலை, ஆக. 27: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அடுத்த மாதம் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (ேலாக் அதாலத்) நடைபெற உள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பி.மதுசூதனன் தெரிவித்திருப்பதாவது: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அடுத்த மாதம் 13ம் தேதி காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. அப்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உறுப்பினர்கள் கொண்ட அமர்வு முன்னிலையில் இருதரப்பு வழக்காடிகளின் சம்மதத்தின் பேரில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். சாலை விபத்து இழப்பீடு வழக்குகள், மின்சார பயன்பாடு, வீட்டு வரி, குடிநீர் வரி, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள், தொழிலாளர் நலன் வழக்குகள், கல்விக் கடன், வங்கி கடன் சம்பந்தமான வழக்குகள் மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து தீர்வு காணப்படும். எனவே, இந்த வாய்ப்பை வழக்காடிகள் பயன்படுத்திக்கொண்டு, நேரடியாக பங்கேற்று கால தாமதமின்றி, எவ்வித இழப்பும், மனகசப்புமின்றி தங்களது பிரச்னைகளை சமரசமாக தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் தீர்த்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement