தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு 2ம் பருவ பாடப்புத்தகங்கள் கல்வி அதிகாரிகள் முன்னிலையில் அனுப்பும் பணி தீவிரம் திருவண்ணாமலை மாவட்டத்தில்
திருவண்ணாமலை, செப். 26: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாடு முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நாளை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் அடுத்த மாதம் 6ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் முதல் நாளன்று, மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள் அனைத்தையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, ஏற்கனவே அந்தந்த கல்வி மாவட்டங்களுக்கு தேவையான எண்ணிக்கையில் பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, திருவண்ணாமலை பெரியார் சிலை அருகேயுள்ள தனியார் பள்ளி வளாகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்கள், கல்வி மாவட்டத்தில் உள்ள 945 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையானவற்றை சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலகங்களுக்கு நேற்று முதல் லாரிகள் மற்றும் வேன்கள் மூலம் அனுப்பும் பணி நடந்து வருகிறது. அதேபோல், செய்யாறு கல்வி மாவட்டத்தில் உள்ள 599 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, செய்யாறு பகுதியில் இருந்து லாரிகள் மூலம் பாடப்புத்தகங்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழவதும் உள்ள 1544 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, சம்மந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்களின் நேரடி மேற்பார்வையில், சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு வரும் 6ம் தேதி இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளது.