வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அண்ணாமலையார் பவனி பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்த மாடவீதி திருவண்ணாமலையில் தீபத்திருவிழா முதல் நாள் உற்சவம் 3 காலம் படம் இரவு வரும்.
திருவண்ணாமலை, நவ. 25: கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் முதல் நாளான நேற்று அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலில் திரண்டு தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து, காலை உற்சவம் நடைபெற்றது. அலங்கார ரூபத்தில் வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் எதிரில் எழுந்தருளினர்.
பின்னர் மாட வீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதைதொடர்ந்து இரவு 8 மணியளவில் அளவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தில் இருந்து வான வேடிக்கையுடன் இரவு உற்சவ புறப்பாடு நடந்தது. அப்போது அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை தரிசித்த பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கமிட்டனர். இதையடுத்து வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், வெள்ளி மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையாரும், ஹம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர். தீபத்திருவிழா உற்சவசத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதியில் பவனியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். அதனால், மாட வீதி முழுவதும் பக்தர்கள் வெள்ளத்தால் நிறைந்திருந்தது. மேலும், தீபத்திருவிழாவை முன்னிட்டு, கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாடவீதியில் சுவாமி திருவீதியுலா நடைபெறுவதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



