செங்கம், செப்.25: செங்கம் அருகே இளம்பெண்ணை சரமாரி அடித்துக்கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் சடலம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த வாசுதேவன்பட்டு கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மிதந்தது. நேற்று காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக பாச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பது தெரியவந்தது. அவரை யாரோ மர்மநபர்கள் அடித்துக்கொன்று சடலத்தை மூட்டை கட்டி வீசி சென்றிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியவில்லை. தொடர்ந்து பாச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் நிலையங்களிலும், சுற்றுவட்டாரங்களில் உள்ள ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களிலும் இளம்பெண்கள் காணாமல் போனதாக புகார்கள் வந்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.
மேலும் போலீசார் கூறுகையில், ‘பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட விசாரணை நடத்தப்படும். அதேபோல் சம்பந்தப்பட்ட பகுதியில் பதிவான செல்போன் சிக்னல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இளம்பெண்ணை வேறு எங்கேயோ அடித்துக்கொன்று சடலத்தை கொண்டு வந்து வீசி சென்றுள்ளனர். இதனால் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தினால் மட்டுமே கொலைக்கான காரணம் தெரியவரும்’ என்றனர். சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.