திருவண்ணாமலை, செப்.24: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தை நீதிமன்ற உத்தரவின்படி மீட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சொந்தமான 621 சதுர அடி இடம், சின்னக்கடை தெருவில் உள்ளது. இதனை, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டி அனுபவித்து வந்தார். எனவே, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தை மீட்க, அண்ணாமலையார் கோயில் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, கோயிலுக்கு சொந்தமான இடத்தை மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, சின்னக்கடை தெருவில் உள்ள 621 சதுர அடி இடத்தில் கட்டியிருந்த வீடு மற்றும் கடையை நேற்று கோயில் இணை ஆணையர் பரணிதரன் முன்னிலையில் ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர். பின்னர், கோயிலுக்கு சொந்தமான இடம் என தகவல் பலகை வைக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. கோயில் நிர்வாகத்தின் மூலம் மீட்கப்பட்டுள்ள இந்த இடத்தின் தற்போதய சந்தை மதிப்பு, சுமார் ரூ.1 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement