செங்கம், செப். 24: செங்கம் அருகே பைக்குகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக பலியாகினர். 2 நண்பர்கள் காயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்புழுதியூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(20). இவரது நண்பர்கள் புகழ்(19), ராகவன்(14). இவர்கள் 3 பேரும் ஒரே பைக்கில் நேற்றுமுன்தினம் மாலை மேல்செங்கம் நோக்கி சென்றனர். அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே சென்றபோது இவர்களின் பைக்கும், எதிரே கோவையில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற அருண்குமார்(22) என்பவரின் பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த சதீஷ், புகழ், அருண்குமார் ஆகியோரை, அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லேசான காயத்துடன் ராகவன் தப்பினார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புகழ், அருண்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தனர். சதீஷ் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் மேல்செங்கம் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பைக்குகள் மோதி 2வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.