பெரணமல்லூர், செப். 23: பெரணமல்லூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ய தொடங்கியது. 54 மிமீ அளவிற்கு கொட்டி தீர்த்தத்தால் ஏரியில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெரணமல்லூர் பகுதியில் சூரியகுளத்திற்கு அருகாமையில் முக்கிய அரசு அலுவலகங்களான வட்டார வளர்ச்சி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் மற்றும் காவல் நிலையம், மேம்படுத்தப்பட்ட சுகாதார மையம் அமைந்துள்ளது. இதில் சூரிய குளத்திற்கு மழை நீர் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நீர்வரத்து கால்வாய்கள் தூர்ந்து போய் காணப்படுவதால் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் குளத்தில் நீர் நிரம்பி சுகாதார வளாக பகுதிக்கு சென்றது. மேலும் குளத்திற்கு எதிரே அமைந்துள்ள பிடிஓ அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்களை சுற்றி தண்ணீர் தேங்கி நின்றது.
தவிர அருகில் உள்ள கடைகளிலும் வெள்ள நீர் புகுந்தது. பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தூர்ந்து போன கால்வாயிலிருந்து சேறும், சகதிகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அரசு அலுவலகங்களை சூழ்ந்த வெள்ளம் 11 மணிக்கு மேல் வடிந்தது.