நகை வாங்க பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு போலீசார் விசாரணை திருவண்ணாமலையில் பட்டப்பகலில் கைவரிசை
திருவண்ணாமலை, செப். 23: திருவண்ணாமலையில் நகை வாங்குவதற்காக பைக்கில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செங்கம் தாலுகா, கரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரேசன் மகன் அஜீத்(25). இவர், கரியமங்கலம் கூட்டுறவு வங்கியில் இருந்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு நகை வாங்குவதற்காக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். திருவூடல் தெருவில் உள்ள ஒரு நகை கடைக்கு சென்று நகையை தேர்வு செய்து முடித்த பிறகு, கூடுதலாக ரூ.10 ஆயிரம் தேவைப்பட்டது. எனவே, கொண்டுவந்த பணத்தை பைக்கில் வைத்துவிட்டு, ராமலிங்கனார் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்துக்கு சென்றார்.
அங்கு ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வந்து பார்த்தபோது, பைக் பெட்டி திறந்து கிடந்தது ெதரியவந்தது. மேலும், அதில் இருந்த ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் திருடுபோனது தெரிந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். நகைக்கடையில் இருந்து நோட்டமிட்டு, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பணத்தை திருடியிருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசில் அஜீத் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருட்டு நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.