விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்
திருவண்ணாமலை, ஆக.23: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வரும் 27ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராம்பிரதீபன், செய்யாறு உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், கூடுதல் எஸ்பி பழனி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்ததாவது: விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் கலந்துகொண்டு சிலைகளை கரைப்பதற்கான அனுமதியை முறையாக காவல் துறையிடம் பெற வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதேபோல், இயற்கை வண்ணங்களை மட்டுமேபயன்படுத்த வேண்டும். ராசாயன வண்ணங்களை பயன்படுத்த கூடாது. நீர்நிலைகளில் மாசு ஏற்படுத்தும் வகையில் சிலைகளை வடிவமைக்க கூடாது. திருவண்ணாமலை மாவட்டத்தில், விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் சிலையை அமைக்க விரும்புவோர், அரசின் நிலையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். காவல்துறையில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், சிலையின் உயரம் அடித்தளம் மற்றும் மேடை உட்பட 10 அடிக்குள் இருக்க வேண்டும். பிற மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு அருகில் சிலை அமைக்க கூடாது. இவர் அவர் தெரிவித்தார்.