வார இறுதி விடுமுறை நாட்களில் அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
திருவண்ணாமலை, செப்.22: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வார இறுதி விடுமுறை தினத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக பக்தர்கள் தரிசனத்துக்காக குவிந்தனர். நினைக்க முக்தித் தரும் அக்னித் திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வார இறுதி விடுமுறை தினங்களான கடந்த 2 நாட்களும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், மஹாளய அமாவாசை தினம் என்பதால் நேற்று கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
அண்ணாமலையார் கோயிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, மஹாளய அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், நேற்று இரவு அமாவாசை மண்டத்தில் அலங்கார ரூபத்தில் சந்திரசேகரர் எழுந்தருளி காட்சியளித்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது.
குறிப்பாக, திருவண்ணாமலை வழியாக மேல்மலையனூர் செல்லும் பக்தர்கள், அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். எனவே, பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அதனால், சுமார் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும், ஆந்திரா, தெலங்கானா மாநில பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்திருந்தது.
பொது தரிசன வரிசை ராஜகோபுரம் வழியாகவும், கட்டண தரிசன வரிசை அம்மணி அம்மன் கோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டது. கோயில் கலையரங்கத்தில் கூடுதல் வரிசைகள் அமைத்ததால், வெளி பிரகாரத்தில் வரிசையில் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலையில் கடந்த 2 நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
குறிப்பாக, திருவண்ணாமலை அறிவொளி பூங்காவில் தொடங்கி பஸ் நிலையம் மற்றும் ரவுண்டானா சந்திப்பு, மத்தலாங்குளத் தெரு, பெரியார் சிலை சந்திப்பு வரையும், சின்னக்கடை தெரு, சன்னதி தெருவிலும் வாகன நெரிசல் காணப்பட்டது. போதுமான போக்குவரத்து போலீசார் பணியில் இல்லாததால், சன்னதி தெருவில் ஆட்டோக்கள் ஆதிக்கத்தால் அந்த வழியாக பக்தர்கள் கடந்து செல்ல முடியாமல் தவித்தனர். எனவே, விடுமுறை நாட்களில் போக்குவரத்து சீரமைப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.