சேத்துப்பட்டு, ஆக.22: தேவிகாபுரம் அருகே 4 மாத கைக்குழந்தையின் தலை மீது தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்ததில் குழந்தை பரிதாபமாக இறந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, வலசை கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் மகன் சிலம்பரசன்(30). கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் அடுத்த மலையம்புரடை கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் அமுதா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், சிலம்பரசன், மனைவி அமுதாவுக்கு பிரசவம் பார்க்க தனது மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் மலையாம்புரடை கிராமத்தில் இருந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் குழந்தையை அமுதாவின் தந்தை ராஜா தோளில் சாய்த்தபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில் இருந்து முதிர்ந்த தேங்காய் ஒன்று எதிர்பாராதவிதமாக குழந்தை தலை மீது விழுந்தது. இதில், சுய நினைவு இழந்த குழந்தையை உறவினர்கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிசிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை நேற்று பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தந்தை சிலம்பரசன் கொடுத்த புகாரின்பேரில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.