ஆரணி, நவ.19: காதல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்த வழக்கில் கணவரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராந்தம்கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்(32), டிரைவர். இவரது மனைவி மாலதி(26). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே குடும்பதகராறு ஏற்பட்டு வந்தது. அப்போதெல்லாம் சதீஷ், அவரது தாய் சசிகலா, தம்பி சரண் ஆகிய 3 பேரும் சேர்ந்து மாலதியை, அவரது தாய் வீட்டிற்கு அனுப்பி பணம், நகை வாங்கி வர சொல்லி துன்புறுத்தி வந்துள்ளனர்.
இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம், மதுராகட்சிகுப்பம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்ற மாலதியை, அவரது பெற்றோர் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சதீஷூக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்துவந்தது. இதையறிந்த மாலதி தனது கணவனை கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சதீஷ் அவரது மனைவி மாலதியை ஆபாசமாக பேசி திட்டி அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், மனவேதனை அடைந்த மாலதி நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, மாலதியின் தாய் மருதம்மாள்(40) கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மாலதியின் கணவர் சதீஷை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சசிகலா, சரண் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


