வாலிபருக்கு சரமாரி கத்திவெட்டு மற்றொரு வாலிபருக்கு வலை கொலைக்கு ‘ரூட்டு’ போட்டு கொடுத்தாயா? எனக்கூறி
செய்யாறு, ஆக.19: செய்யாறு அருகே கொலைக்கு ரூட்டு போட்டு கொடுத்தாயா? எனக்கூறி வாலிபரை சரமாரியாக வெட்டிய மற்றொரு வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். செய்யாறு டவுன் கன்னியம் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(23). இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள நெல் குடோன் அருகே அமர்ந்திருந்தாராம். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அனிமி என்கிற ராமச்சந்திரன், பாலசுப்பிரமணியிடம் ஆபாசமாக பேசியுள்ளார். அப்போது, ‘எனது அண்ணன் மகன் சில்க் என்கிற ஜெமினியை வெட்டிக்கொலை செய்தவர்களுக்கு ‘ரூட்டு’ போட்டு கொடுத்தது நீதானே, உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?, எனக்கூறி கத்தியால் தோள்பட்டை, முதுகு, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணி அலறினார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனை கண்ட ராமச்சந்திரன், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து படுகாயமடைந்த பாலசுப்பிரமணியை அப்பகுதி மக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அனிமி என்கிற ராமச்சந்திரனை தேடி வருகிறார்.