டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய டீசல் * கேன்களில் பிடித்து சென்ற பொதுமக்கள் * ஆபத்தை உணராமல் அலட்சியம் திருவண்ணாமலை அருகே சாலை கடந்த மூதாட்டி பலி
திருவண்ணாமலை, நவ.18: திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதிய டீசல் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆபத்தை உணராமல் டேங்கரில் இருந்து வெளியேறிய டீசலை பொதுமக்கள் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அடுத்த தென்னரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மனைவி கனகாம்பரம்(70). இவர் நேற்று வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு டீசல் சப்ளை செய்யும் டேங்கர் லாரி, திடீரென சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கனகாம்பரம் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மூதாட்டி பலியானார். அதோடு, இந்த விபத்தை தவிர்க்க நினைத்த டிரைவர், திடீரென பிரேக் அடித்துள்ளார்.
அதனால், டேங்கர் லாரி நிலை தடுமாறி சாலையோரம் கவிழந்தது. டேங்கரில் இருந்த டீசல் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், டேங்கரில் இருந்து வழிந்து ஓடிய மற்றும் சாலையோரம் தேங்கி நின்ற டீசலை பிளாஸ்டிக் கேன் மற்றும் குடங்களில் எடுத்துச்சென்றனர். ஆபத்தை உணராமல் டீசல் சேகரிக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. தொடர்ந்து, போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர். எதிர்பாராமல் தீப்பற்றினால், டேங்கர் லாரி வெடித்துச் சிதறும் என்ற ஆபத்தை உணராமல் டீசலை எடுத்துச்சென்றது அச்சத்தை ஏற்படுத்தியது.


