செய்யாறு, செப்.17: செய்யாறு அருகே தலையில் ரத்த காயத்துடன் விவசாயி இறந்து கிடந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த மாங்கால் கூட்ரோட்டில் சிப்காட்டிற்கான சாலை உள்கட்டமைப்பு பணி நடந்து வருகிறது. இங்குள்ள சாலை நடுவில் கட்டப்பட்ட தரைப்பாலத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக நேற்று முன்தினம் நள்ளிரவு தூசி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், விரைந்து சென்ற செய்யாறு டிஎஸ்பி கோவிந்தசாமி, தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்னாதன், சப்- இன்ஸ்பெக்டர் பழனிவேல் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சடலமாக கிடந்தவர் மாங்கால் கூட்ரோட்டை சேர்ந்த விவசாயி கன்னியப்பன்(45) என்பது தெரியவந்தது.
கன்னியப்பன் செய்யாறு சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்தும்போது நிலத்தின் ஒரு பகுதியை கொடுத்தவர் என்பதும், எஞ்சியுள்ள நிலத்தின் அருகே தற்போது சாலை உள்கட்டமைப்பு பணி நடந்து வரும் நிலையில், இதுதொடர்பாக ஒப்பந்ததாரருக்கும், கன்னியப்பனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கன்னியப்பன் தலையில் ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததால் அவர் தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாராவது தாக்கி கீழே தள்ளினார்களா? அல்லது முன்விரோத தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்பே அவர் எப்படி இறந்தார்? என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
இறந்த கன்னியப்பனுக்கு சல்சா என்ற மனைவி, ஹேமராஜ்(20) என்ற மகன், பிரியதர்ஷினி(18) என்ற மகள் உள்ளனர். இதற்கிடையில், கன்னியப்பன் சாவில் சந்தேகம் உள்ளது எனவும், அதற்கு காரணமான நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நேற்று காலை அப்பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த டிஎஸ்பி கோவிந்தசாமி, தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகன்னாதன் மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.