வீடு புகுந்து திருடிய மாமியார், மருமகன் அதிரடி கைது வேலூரை சேர்ந்தவர்கள் ஆரணி அருகே ஆட்டோவில் சென்று கைவரிசை
ஆரணி, ஆக.16: ஆரணி அருகே ஆட்டோவில் சென்று வீடு புகுந்து திருடிய வேலூரைச் சேர்ந்த மாமியார், மருமகன் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் பி.ஆர்.நகரை சேர்ந்தவர் முருகன் மனைவி சுதா(31). இவர் அதே பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 10ம் தேதி சுதா கவனக்குறைவாக வீட்டை பூட்டாமல் ஆரணிக்கு சென்றுள்ளார். பின்னர், வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 2 சவரன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து சுதா ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஒரு ஆட்டோ, சுதா வீட்டின் அருகே வந்து நிற்பதும், அதில் இருந்து ஒரு பெண், ஒரு ஆண் வீட்டிற்குள் சென்று பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறி செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது. இதையடுத்து, ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் சுதா வீட்டில் திருடியது ஆட்டோ டிரைவரான வேலூர் கந்தசாமி நகரை சேர்ந்த கருணாகரன்(31), அவரது மாமியாரான வேலூர் சூரியகுளம் பகுதியை சேர்ந்த ஜமுனா(47) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கருணாகரனின் செல்போன் சிக்னல் ஆரணி அடுத்த புதுப்பாளையம் பகுதியில் காண்பித்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது, கருணாகரன் ஆட்டோவுடன் நின்றுக்கொண்டிருந்ததும், அவரது மாமியார் ஜமுனா அங்குள்ள வீட்டில் இருந்து பித்தளை அண்டாவை திருடிக்கொண்டு வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் இருவரும் சேர்ந்து சுதா வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து போலீசார், கருணாகரன் மற்றும் அவரது மாமியார் ஜமுனா இருவரையும் நேற்று காலை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.