ஆதரவற்று தவித்த 2 வயது ஆண் குழந்தை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர் திருவண்ணாமலை அருகே ஏடிஎம் மைய வாசலில்
திருவண்ணாமலை, அக்.16: திருவண்ணாமலை அருகே நேற்று இரவு ஏடிஎம் மைய வாசலில் ஆதரவற்று தவித்த 2 வயது ஆண் குழந்தையை போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் மலப்பாம்பாடி அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையத்தின் முன்பு, நேற்று இரவு 7 மணி அளவில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை அழுத நிலையில் ஆதரவற்று நின்று கொண்டிருந்தது. அந்த வழியாக சென்றவர்கள் குழந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நீண்ட நேரமாகியும் குழந்தையை தேடி யாரும் வரவில்லை. எனவே, தகவல் அறிந்து விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதற்கிடையில், குழந்தையை தேடிக்கொண்டு காவல் நிலையம் வந்த குழந்தையின் தந்தை கழிக்குளம் கிராமத்தை சேர்ந்தவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். அப்போது, வீட்டில் நடந்த தகராறில் தனது மனைவி கோபித்துக் கொண்டு, குழந்தை அழைத்து சென்றதாகவும், அவர்களை தேடிக்கொண்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், குழந்தை மட்டும் ஏடிஎம் வாசலில் மீட்கப்பட்ட நிலையில், அதன் தாய் எங்கே சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.