Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெண்டைக்காய் விலை கடும் வீழ்ச்சி கால்நடைகளுக்கு உணவாக்கும் அவலம் திருவண்ணாமலை மாவட்டத்தில்

கண்ணமங்கலம், செப்.16: திருவண்ணாமலை மாவட்டத்தில் வெண்டக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அவற்றை கால்நடைகளுக்கு உணவாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, போளூர், கேளூர், படவேடு மற்றும் சந்தவாசல் பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களில் காய்கறிகள் அதிக அளவில் பயிர் செய்து வருகின்றனர். அவற்றை தினந்தோறும் பறித்து வேலூர், ஆரணி, திருவண்ணாமலை, போளூர் போன்ற நகர்ப்புறங்களில் உள்ள காய்கறி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

குறிப்பாக, இந்த பகுதிகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், பாகற்காய், புடலங்காய் மற்றும் முள்ளங்கி உட்பட காய்கறிகளை அதிக அளவில் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில், வெண்டைக்காய் மகசூல் அதிகமாகி அதிக அளவில் காய்த்து வருகிறது. இதனால், காய்கறி மார்க்கெட்களில் வெண்டைக்காயின் விலை கணிசமாக குறைந்துள்ளது. வியாபாரிகள் ஒரு கிலோ வெண்டைக்காய் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு வாங்குகின்றனர். இதனால் காய் பறிக்கும் கூலி கூட கொடுக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வெண்டைக்காய் விளைச்சல் அதிக அளவில் இருந்தும் விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் தற்போது நன்கு விளைந்து காய்த்து அதிக அளவில் மகசூல் தந்து கொண்டிருக்கும் வெண்டைக்காய் தோட்டத்திலேயே மாடுகள் உட்பட கால்நடைகளுக்கு உணவாக மேய்த்து வருகின்றனர். இதுகுறித்து கேளூர் பகுதியை சேர்ந்த விவசாயி கூறுகையில், ‘தற்போது வெண்டைக்காய் விளைச்சல் அதிக அளவில் உள்ளது. இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்களில் அதன் விலை குறைந்துள்ளது. அவற்றை விற்க மனமில்லாமல் கால்நடைகளுக்கு உணவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வெண்டைக்காய் மூலம் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது’ என்றார்.