திருவண்ணாமலை, செப்.16: வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீப திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருவிழா வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, கோயில் இணை ஆணையர் பரணிதரன் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது, தீபத் திருவிழாவை முன்னிட்டு 24 தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் 116 கார் பார்கிங், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் சிறப்பு பஸ்கள் இயக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், கிரிவலப் பாதை மற்றும் மாட வீதி போன்ற இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு செய்து முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதேபோல், அன்னதானம் வழங்குவதற்கான அனுமதி வழங்குதல், மருத்துவ முகாம்கள் அமைத்தல் போன்ற பணிகளை முன்கூட்டியே திட்டமிட்ட வேண்டும் என்றார்.