திருவண்ணாமலை திருக்கோயில் நகர் மேம்பாட்டு ஆணையம் அமைக்க திட்டம் தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்படும் பக்தர்களின் வசதி மற்றும் நகரின் வளர்ச்சிக்காக
திருவண்ணாமலை, ஆக.15: திருவண்ணாமலை நகரின் வளர்ச்சி மற்றும் திருக்கோயில் மேம்பாட்டுக்காக திருவண்ணாமலை திருக்கோயில் நகர் மேம்பாட்டு ஆணையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திகழ்கிறது. நினைக்க முக்தித் தரும் திருத்தலம் எனும் சிறப்பை பெற்றுள்ள திருவண்ணாமலையில் மலையே மகேசனாக காட்சியளிக்கிறார். எனவே, மலையை வலம் வந்து வழிபடுவது தனிச்சிறப்பாகும். தென்னகத்தின் கயிலாயம் என போற்றப்படும் திருவண்ணாமலை திருக்கோயில் சைவத் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது.
அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக இறைவன் காட்சியளித்தது, உமையாளுக்கு இடபாகம் அருளியது என எண்ணற்ற திருவிளையாடல்கள் நிகழ்ந்த திருத்தலம் என்பதால், பக்தர்களின் மனம் கவர்ந்த திருக்கோயிலாக பிரசித்தி பெற்றிருக்கிறது. அதனால், மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதுதவிர, சித்ரா பவுர்ணமி மற்றும் தீபத்திருவிழா நாட்களில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் இங்கு திரண்டு வழிபடுகின்றனர். குறிப்பாக, சமீப காலமாக பவுர்ணமிக்கு இணையாக வார இறுதி நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் குவிகிறது. அதோடு, நாள்தோறும் தரிசனத்துக்காக வருகை தரும் வெளி மாநில பக்தர்கள் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறது. இந்த நிலை வரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
எனவே, திருவண்ணாமலை நகரின் உள் கட்டமைப்பு வசதிகளை முறையாக திட்டமிட்டு நிறைவேற்றவும், கோயில் நிர்வாகத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை திருக்கோயில் நகர் மேம்பாட்டு ஆணையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. திருவண்ணாமலை நகரின் வளர்ச்சி குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆணையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் தலைமை செயலாளர் நிலையிலான உயர் அலுவலர் தலைமையில், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அலுவலர்கள், நகர அமைப்பு அலுவலர் ஆகியோரை உறுப்பினராக கொண்டு இந்த ஆணையம் செயல்பட உள்ளது. அதோடு, இந்த ஆணையம் தனித்து இயங்கும் அதிகாரம் பெற்றதாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆன்மிக திருத்தலமாக திருவண்ணாமலை மாறி வருவதால், நகரின் வளர்ச்சியை மேம்படுத்துவதும், போக்குவரத்து வசதி, சாலை வசதி, தங்கும் விடுதிகள், பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றில் தனி கவனம் செலுத்துவதற்காக இந்த ஆணையம் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது. அதோடு, ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளை அரசும், அறநிலையத்துறையும் ஏற்று முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றும் வகையில், அதற்கான முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை திருக்கோயில் நகர் மேம்பாட்டு ஆணையம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமைக்கப்படும் என தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்தை சீர்படுத்த, கூடுதலாக ஒரு இணை ஆணையர் பணியிடம் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம் போன்றவையும் ஏற்படுத்தப்பட உள்ளன. அதோடு, தற்போது கோயில் பிரகாரத்துக்குள் அமைந்துள்ள நிர்வாக அலுவலகம் போல, பக்தர்கள் எளிதில் தொடர்பு கொள்ள வசதியாக கோயில் வெளி பிரகாரத்திலும் ஒரு நிர்வாக அலுவலகம் செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஆணையம் அமைப்பது தொடர்பாக விரைவில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது, அதற்கான முழு வடிவம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.