Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் 2வது நாளாக கலெக்டர் ஆய்வு உழவர் சந்தை, தூய்மைப் பணிகளை பார்வையிட்டார் திருவண்ணாமலை மாநகராட்சியில்

திருவண்ணாமலை, ஆக.15: திருவண்ணாமலை மாநகராட்சி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், தொடர்ந்து 2வது நாளாக அரசு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.

பொதுமக்களை உயர் அலுவலர்கள் நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அதன்படி, மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் ஒரு தாலுகாவை தேர்ந்தெடுத்து, கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் மக்களை சந்திக்கின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார். பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, 2வது நாளாக நேற்று திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அதன்படி, திருவண்ணாமலை மத்தலாங்குளத் தெரு, வடவீதி சுப்பிரமணியர் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில், மாநகராட்சி சார்பில் நடைபெறும் தூய்மைப் பணியை பார்வையிட்டார். அப்போது, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்கள் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், தினமும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பகுதியில் பணிக்கு வருகின்றனரா என கேட்டறிந்தார். அதோடு, தூய்மைப் பணியாளர்களும் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டும், கையுறை, முக கவசம் போன்றவற்றை அணித்து பாதுகாப்பாக பணியில் ஈடுபட வேண்டும் என்றார்.

மேலும், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த கலெக்டர், மாதந்தோறும் தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என மாநகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, திருவண்ணாமலை உழவர் சந்தையை பார்வையிட்ட கலெக்டர் தர்ப்பகராஜ், காய்கறிகளை விற்பனை செய்யும் விவசாயிகளின் கோரிக்கைளை கேட்டறிந்தார். விலை நிர்ணயம், விற்பனை போன்றவை குறித்து விசாரித்த கலெக்டர், காய்கறி சாகுபடிக்கான அரசு திட்டங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் செயல்பட வேண்டும் என்றார்.

மேலும், உழவர் சந்தையை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும், பொதுமக்கள் வந்து செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும் என்றார். அதோடு, தாங்கள் விளைவிக்கும் தோட்ட காய்கறிகளை கொண்டுவந்து விவசாயிகள் விற்பனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, வேங்கிக்கால்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை ஆய்வு செய்த கலெக்டர் தர்ப்பகராஜ், அங்கு மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். மேலும், சூடாகவும், சுவையாகவும் காலை உணவு வழங்கப்படுகிறதா என மாணவர்களிடம் கேட்டறிந்தார். அதோடு, பள்ளி வளாகத்தையும், சமையல் கூடத்தையும் தூய்மையாக பராமரிக்க வேண்டும், மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட தேவையான முயற்சிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், தொடக்கக் கல்விதான் உயர்கல்விக்கு அடித்தளம் என கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, டிஆர்ஓ ராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையாளர் செல்வபாலாஜி, முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.