இலங்கை தமிழர்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி * சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு * விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு திருவண்ணாமலை மாவட்டத்தில்
திருவண்ணாமலை, அக். 14: திருவண்ணாமலை மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கு புதிதாக கட்டப்படும் வீடுகளை அமைச்சர் ஆ.மு.நாசர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், 11 இடங்களில் இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்கள் செயல்பட்டு வருகிறது. நீண்ட காலமாக இங்கு குடியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தர அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட கணந்தம்பூண்டி ரூ.4.79 கோடி மதிப்பிலும், நல்லவன்பாளையம் சமுத்திரம் பகுதியில் ரூ4.79 கோடி மதிப்பிலும் புதிய வீடுகள் கட்டப்படுகிறது. இப்பணிகளை, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஆ.மு.நாசர் நேற்று ஆய்வு செய்தார். மேலும், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து இலங்கை தமிழர்களை குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது, கலெக்டர் தர்ப்பகராஜ், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை ஆணையர் வள்ளலார், எம்எல்ஏ மு.பெ.கிரி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆ.மு.நாசர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி, தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்கள் வாழ்தாரம் இழந்து வாடியபோது அவர்களுக்கு நேச கரம் நீட்ட வேண்டும் என்ற அடிப்படையில், அவர்களை புலம் பெயர்ந்த தமிழர்கள் என்ற பெயரை சூட்டி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 104 முகாம்களில் வாசிப்பவர்களுக்கு வேறு இடத்தில் சிறப்பான முறையில் தங்குவதற்கு வீடுகளை கட்டித்தரப்படுகிறது. இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 6.10.2025 அன்று அகரம் பகுதியில் 252 வீடுகளை பயன்பாட்டிற்காக முதல்வர் திறந்து வைத்தார்.
இலங்கை தமிழர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, குடும்ப தலைவர்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகையும், மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகைகளும், ஆண்டுக்கு ஒரு முறை வீட்டு உபயோக பொருட்களும், தொழிற்கல்வி படிப்பவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.10 ஆயிரமும், பிஎஸ்சி பிகாம் படிப்பவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.20 ஆயிரமும், எம்ஸ்சி எம்காம் படிப்பவர்களுக்கு உதவித்தொகையாக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இலங்கை தமிழர்களுக்கு சுயஉதவி குழுக்கள் மூலம் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. உலகத்தில் எந்த பகுதியிலும் புலம் பெயர்பவர்களுக்கு இது போன்ற எந்த திட்டங்களையும் செய்வதில்லை. ஆனால், தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு அனைத்து விதமான திட்டங்களும் செயல்படுத்தபடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, மூத்தோர் தடகள சங்க துணை தலைவர் கார்த்தி வேல்மாறன், மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
முன்னதாக, போளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கஸ்தம்பாடி பகுதியில் ரூ.16.46 கோடி மதிப்பீட்டில் 280 வீடுகள் கட்டும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது, வீடு கட்டும் பணிகளை தரமான முறையில் ஒரு மாதத்திற்குள் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அடைப்படை வசதிகள், கால்வாய் வசதிகள், குடிநீர் மேநீர் தேக்க தொட்டி, மின் இணைப்பு, விளையாட்டு மைதானம், சிறுவர் பூங்கா, நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகள் செய்துதர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.