Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு வண்ண மின்னொளி அலங்காரம் * கிரிவலப்பாதையில் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் * காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் ரூ.10.53 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்

திருவண்ணாமலை, அக்.14: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரங்களுக்கு ரூ.7.58 கோடி மதிப்பில் நிரந்தர வண்ண மின்விளக்கு அலங்காரம் மற்றும் ரூ.2.95 கோடி மதிப்பில் பசுக்கள் காப்பகத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், உலக புகழ்பெற்ற சைவத்திருதலமாகும். பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முத்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது. எனவே, இக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை சமீப காலமாக வெகுவாக அதிகரித்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையும், பெருமையும் மிக்க அண்ணாமலையார் திருக்கோயில், வியக்கத்தக்க கற்கோயில் கட்டுமான கலை நுட்பத்துக்கு சான்றாக இருக்கிறது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 உட்பிரகாரங்களுடன் அமைந்திருக்கும் இக்கோயில், பல்வேறு மன்னர்களின் காலகட்டங்களில் படிப்படியாக கட்டப்பட்டது என்றாலும், ஒரே காலத்தில் கட்டியதை போன்ற தோற்றத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு.

இந்நிலையில், அண்ணாமலையார் திருக்கோயில் கோபுரங்கள் தீபத்திருவிழா உற்சவம் நடைபெறும் நாட்களில் மட்டும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கிறது. மற்ற நாட்களில் மின்னொளி அலங்காரம் செய்வதில்லை. எனவே, இக்கோயிலை தரிசிக்க வரும் பக்தர்கள், அனைத்து நாட்களிலும் வண்ண விளக்கு அலங்காரத்தில் தரிசிக்க வசதியாக அனைத்து கோபுரங்களுக்கும் நிரந்தர வண்ண மின் விளக்கு அலங்காரம் அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறநிலையத்துறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அண்ணாமலையார் கோயிலில் அமைந்துள்ள ராஜகோபுரம், பேகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், தெற்கு கோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்கள் மற்றும் 17 விமானங்களுக்கு ரூ.5 கோடி மதிப்பில் தற்போது வண்ணமயமான மின் விளக்குகளால் ஒளிரூட்டப்பட்டுள்ளது. ேமலும், ராஜகோபுரத்தின் கல்காரம் பகுதி ரூ.82 லட்சம் மதிப்பிலும், அம்மணி அம்மன் கோபுரம், பே கோபுரம், தெற்கு கோபுரம் கல்கார பகுதிகள் ரூ.1.76 கோடி மதிப்பிலும் வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் வெவ்வேறு வண்ணங்களில் ஒளிரும் வகையில் அமைந்திருப்பது காண்போரை வியக்க வைப்பதாக அமைந்துள்ளது.

மேலும், தொன்மை வாய்ந்த கோபுரங்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், வெப்பம் குறைந்த மற்றும் தரம் பரிசோதிக்கப்பட்ட வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்மூலம், திருவண்ணாமலை நகரின் எந்த திசையில் இருந்து கோயிலை தரிசித்தாலும் பேரெழிலாக காட்சி தரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் கோபுரங்களை ஒளிரூட்டுவதற்காக பொருத்தப்பட்டுள்ள வண்ண மின் விளக்குகளை நேற்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சோணாநதி தோப்பு அருகே 11218 சதுர அடி பரப்பளவில் ரூ.2.95 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகத்தையும் காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, கோயில இணை ஆணையர் பரணிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், திட்டப்பணிகளை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர். மேலும், முதல்வர் பங்கேற்ற காணோலி காட்சி நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.