தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,302 வழக்குகளுக்கு உடனடி தீர்வு * உயர்நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார் * ரூ.9.92 கோடி உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை திருவண்ணாமலையில் நடந்த
திருவண்ணாமலை, செப்.14: திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1302 வழக்குகளுக்கு சமரசம் ஏற்படுத்தப்பட்டு, ரூ.9.92 கோடிக்கு தீர்வு காணப்பட்டு உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில், சமரச தீர்வுக்கு தகுதி வாய்ந்த மற்றும் இருதரப்பினரும் ஏற்கும் வகையில் தீர்வு காண்பதற்கான வழக்குகளை, ‘லோக் அதாலத்’ எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து தீர்வு காணப்படுகிறது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் நேற்று மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, லோக் அதாலத் எனப்படும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் செயல்படும் மாற்று தீர்வு மையத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. அதேபோல், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செங்கம், போளூர், தண்டராம்பட்டு, கலசபாக்கம் உள்ளிட்ட மொத்தம் 7 இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி பி.மதுசூதனன் வரவேற்றார். அதில், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி கே.சுஜாதா, மற்றும் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர், முதன்மை சார்பு நீதிபதி மற்றும் லாயர்ஸ் அசோசியேஷன் கே.வி.மனோகரன், பார் அசோசியேசன் நாககுமார், அட்வகேட் அசோசியேஷன் சேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு, வங்கி சார்ந்த வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டன. அதன்படி, மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம், மொத்தம் 3849 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டன. அதில், வழக்கில் தொடர்புடைய இருதரப்பினரும் நேரில் ஆஜராகி, சமரச தீர்வுக்கு உடன்பட்டதன் அடிப்படையில், வங்கிகள் தொடர்பான வழக்குகள் மற்றும் நீதிமன்ற நிலுவை வழக்குகள் உள்பட மொத்தம் 1302 வழக்குகளுக்கு நேற்று உடனடியாக சமரசம் ஏற்படுத்தப்பட்டது. அதன்மூலம், ₹9 கோடியே 95 லட்சத்து 89 ஆயிரத்து 906 வசூலிக்கப்பட்டு, வழக்குகளுக்கு உரியவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.