திருவண்ணாமலை, நவ.13: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை மற்றும் இரவு சுவாமி மாடவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் அடுத்த மாதம் 3ம் தேதி மாலை கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும். மகாதீபத்தை தரிசிக்கவும் கிரிவலம் செல்லவும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் நேற்று காலை தொடங்கியது. தாலுகா இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, நடைபாதையில் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரக்கடைகள், ஜூஸ் கடைகள், டிபன் கடைகள், இளநீர் கடைகள் போன்ற கடைகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைக்கக்கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், `கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளை தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.
