ஆரணி, நவ.12: ஆரணி அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர். இவரது 5 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். அன்று பள்ளி விடுமுறை என்பதால் தனியாக இருந்த சிறுமி, அருகே உள்ள வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜானகிராமன்(72) என்பவர் சிறுமியை அருகில் உள்ள கொட்டகைக்கு தூக்கிச்சென்று பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கதறி அழுதார். உடனே ஜானகிராமன் சிறுமியை அடித்து, வெளியில் யாரிடமாவது சொன்னால் ஒழித்து விடுவேன் என மிரட்டி வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர், அன்று மாலை வேலையை முடித்துவிட்டு சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்த போது, சிறுமி அழுது கொண்டிருந்தார். விசாரித்தபோது சிறுமி நடந்த சம்பவம் குறித்து அழுதபடி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முதியவர் ஜானகிராமனை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை திருவண்ணாலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
