செய்யாறு, நவ.12: செய்யாறு அடுத்த நெடும்பிறை அரசு பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று, மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று, திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் பல்வேறு எடை பிரிவுகளின் கீழ் நடந்தது. இப்போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் செய்யாறு கல்வி மாவட்டம், நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் லத்திகா, யோக, வாசுமதி, நமிதா, ஜெகதீஸ்வரி, தமிழரசி, டோனிசென்னல், ஹேமாவதி, ஹேமலதா, லிங்கேஸ்வரன் ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர். தொடர்ந்து, தேனியில் நடைபெற உள்ள மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் யுவராஜன், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியை சந்திரகலா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர் ராமு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாணிக்கம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஆனந்தி, சக மாணவ, மாணவிகள், பெற்றோர் பாராட்டினர்.
+
Advertisement
