முள்புதர்களை அகற்றி சாலை விரிவாக்கம் அதிகாரிகள் நடவடிக்கை வெட்டியாந்தொழுவம் வனப்பகுதியில் இருபுறம் சூழ்ந்திருந்த
ஆரணி, செப். 12: ஆரணி அடுத்த சேவூர்-வேதாஜிபுரம் செல்லும் சாலை வெட்டியாந்தொழுவம் வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த சாலையில் ஆரணியில் இருந்து முள்ளண்டிரம், கவனூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. மேலும் 15 ஆண்டுகளுக்கு மேலாக வெட்டியாந்தொழுவம் காப்பு காட்டின் வழியாக செல்லும் தார்சாலையின் இருபுறமும் முள்புதர்கள், முள்செடிகள் அதிகளவில் வளர்ந்து சாலைகள் மிக குறுகளாக இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமமடைந்து வந்தனர்.
வனப்பகுதியில் உள்ள சாலையின் இருபுறமும் பரவியுள்ள முள் செடிகளை அப்புறப்படுத்தி, சாலையை விரிவாக்கம் செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் கடந்த 6ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக வெட்டியாந்தொழுவம் காப்புகாட்டு வழியாக செல்லும் சாலைகளில் சூழ்ந்துள்ள முள்செடிகள், கொடி, மரங்களை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் நாராயணன் தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜேசிபி மூலம் சாலையில் உள்ள முள்செடிகள், புதர்களை அகற்றும் பணியில் கடந்த 2 தினங்களாக ஈடுபட்டிருந்தனர். இப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, சாலையை அகலப்படுத்தப்பட்டு நேற்று சரிசெய்யப்பட்டது. மேலும், 30 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வெட்டியாந்தொழுவம் வனப்பகுதியில் உள்ள சாலையில் சூழ்ந்துள்ள முள்செடிகள், புதர் மண்டிகளை அகற்றி, சாலை சரி செய்து கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.