குறைதீர்வு கூட்டத்தில் தீக்குளிப்பு முயற்சி தடுக்க கூடுதல் கண்காணிப்பு 419 மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண கலெக்டர் உத்தரவு திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த
திருவண்ணாமலை, நவ.11: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது. அப்போது, தீக்குளிப்பு முயற்சிகளை தடுக்க கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது, அதில், டிஆர்ஓ ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, ஆர்டிஓ ராஜ்குமார் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள், கலைஞரின் வீடு வழங்கும் திட்டம், சாலை வசதி, தாட்கோ கடன் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 419 பேர் மனு அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது, விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.
மேலும், கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார். மேலும், கலெக்டர் அலுவலக தரைதளத்தில் மனு அளிக்க காத்திருந்த மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கலெக்டர் மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். அப்போது, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார். இந்நிலையில், தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தடுக்க கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதோடு, பொதுமக்கள் கொண்டுசென்ற பை, குடிநீர் பாட்டில் உள்ளிட்டவைகளை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். மேலும், அனைத்து நுழைவு வாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

