வந்தவாசி, அக். 11: வந்தவாசி அருகே மருந்து கடையில் சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் சிவப்பிரியாவுக்கு தெள்ளாரில் உள்ள ஒரு மருந்து கடையில் மருத்துவம் பார்ப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு சிவப்பிரியா நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த மருந்து கடையில் பொதுமக்களுக்கு பயன்படுத்தும் ஊசி மற்றும் குளுக்கோஸ் ஏற்றுவதற்கான சிரஞ்சி உள்ளிட்டவைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவரை கண்டதும் அங்கு இருந்த மருந்தாளுனர் விஜயகோபால்(45) தலைமறைவானார். பின்னர் விசாரணை மேற்கொண்டத்தில் அவர் தெள்ளார் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொகுப்பு ஊதியத்தில் பள்ளி மாணவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கும் பணி செய்து வருவது தெரிய வந்தது. மேலும் மாலை நேரத்தில் தெள்ளாரில் மருந்து கடை நடத்தி வருவதாகவும், மருந்து கடையில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவப்பிரியா தெள்ளார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான விஜயகோபாலை தேடி வருகிறார்.
+
Advertisement