ஆந்திர பெண்ணின் சடலம் புதரில் கண்டெடுப்பு ேபாலீசார் விசாரணை வேன் மோதியதில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த
கலசபாக்கம், அக். 10: வேன் மோதியதில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த ஆந்திர பெண்ணின் சடலம் புதரில் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் விண்மைலா தாலுகா நாயுடு பேட்டை மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு(42). இவர் நேற்று ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பைக்கில் கலசபாக்கம் அடுத்த குருவிமலை அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது சிவகாசியிலிருந்து குடியாத்தம் சென்று கொண்டிருந்த மேக்சி கேப் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் வந்த சுரேஷ்பாபு சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று விபத்து நடந்த இடத்தில் அருகாமையில் உள்ள புதரில் பெண் சடலம் இருந்ததை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கலசபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயா(35) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் விபத்தில் பலியான சுரேஷ் பாபுவின் உறவினர் எனவும் விபத்து ஏற்படும்போது விபத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் இறந்து விட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்ததின் பேரில் அடையாளம் தெரிய வந்தது என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் விபத்து நடந்த மறுநாள் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.