வந்தவாசி, செப். 10: வந்தவாசி அருகே கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்திய 9 வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வீரம்பாக்கம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியுடன் நின்று கொண்டு அவ்வழியாக செல்பவர்களை மிரட்டி வருவதாக நேற்று வந்தவாசி வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பிரசாந்த் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அங்கு பொதுமக்களை மிரட்டி கொண்டிருந்த வாலிபரை கத்தியுடன் மடக்கி பிடித்தனர். பின்னர் விசாரணை செய்ததில் தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மகன்பூபாலன்(25), என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்து கத்தியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பூபாலனை வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் மீது வந்தவாசி வடக்கு போலீசில் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
+
Advertisement