பள்ளி மாணவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதி கலெக்டர் நலம் விசாரித்தார் கள்ளக்குறிச்சியில் பல்லி விழுந்த சத்துணவு சாப்பிட்ட
திருவண்ணாமலை, செப்.9: பல்லி விழுந்த உணவை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களை கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அடுத்த ஜம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நேற்று மதியம் வழக்கம்போல மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். அதில், பல்லி ஒன்று விழுந்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மதிய உணவு சாப்பிட்ட சில மாணவர்களுக்கு வாந்தியும் லேசான மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இந்த தகவல் பரவியதும், பெற்றோர்கள் பதற்றத்துடன் பள்ளிக்கு விரைந்து வந்துள்ளனர்.
தொடர்ந்து, பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர், மாணவர்கள் அனைவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களை, திருவண்ணாமலை கலெக்டர் தர்ப்பகராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மாணவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், ஒவ்வாமை காரணமாக சிலருக்கு வாந்தியும், மயககமும் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனாலும், மாணவர்களை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்திருந்த பிறகு டிஸ்சார்ஜ் செய்யுமாறு கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து, நேற்று மாலை முதல் படிப்படியாக மாணவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.