திருவண்ணாமலை, அக். 8: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா பாதுகாப்புக்கு முன்னேற்பாடு குறித்து வேலூர் சரக டிஐஜி ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 25ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழாவின் நிறைவாக டிசம்பர் 3ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெற உள்ளது. விழாவில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி, முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தீபத்திருவிழா பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அண்ணாமலையார் கோயிலில் வேலூர் சரக டிஐஜி தர்மராஜன் மற்றும் திருவண்ணாமலை எஸ்பி சுதாகர் ஆகியோர் நேற்று நேரடி ஆய்வு நடத்தினர்.
அப்போது, தீபத் திருவிழாவின் போது அண்ணாமலையார் கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட கருவிகளை பொருத்துதல், பக்தர்களை அனுமதிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கலாம் என்பதால், கோயில் உள்பிரகாரம் மற்றும் மாத வீதி கிரிவலப்பாதை போன்ற இடங்களில் நெரிசல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆய்வின்போது, கூடுதல் எஸ்பிக்கள் குணசேகரன், அண்ணாதுரை, ஏஎஸ்பி சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.