இலங்கை தமிழர்களுக்கு ரூ.14.44 கோடியில் புதிய வீடுகள் காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார் கலசபாக்கம், துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் வசிக்கும்
கலசபாக்கம், அக். 7: கலசபாக்கம், துரிஞ்சாபுரம் ஒன்றியங்களில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.14.44 கோடியில் புதிய வீடுகளை காணொலியில் முதல்வர் திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் 104 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை உறுதி செய்திட இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி கீழ்பென்னாத்தூர் தொகுதிக்குட்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொர குளத்தூர் முகாமில் 92 குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ரூ.5.30 கோடி மதிப்பீட்டிலும், அதேபோல் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் ஒன்றியம் தென் பள்ளிப்பட்டு கிராமத்தில் வசித்த 160 குடியிருப்பு குடும்பங்களுக்கு ரூ.9.22 கோடி மதிப்பீட்டில் துரிஞ்சாபுரம் ஒன்றியம் நாயுடு மங்கலம் ஊராட்சி அகரம் சிப்பந்தி பகுதியில் 252 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இதனை நேற்று காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து இனிப்பு வழங்கினார். மேலும் குடியிருப்பு பகுதியில் செய்து தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட நிகழ்ச்சியில் கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பி சி.என்.அண்ணாதுரை, கலசபாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் ஆகியோர் குடியிருப்பு பகுதிகளை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் மணி, ஆர்டிஓ ராஜ்குமார், ஒன்றிய திமுக செயலாளர்கள் அண்ணாமலை, ராமஜெயம், ஆரஞ்சி ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, பிடிஓ ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.