கணவருடன் வாழ்ந்து வரும் எனது காதலியை மீட்டுத்தாருங்கள் மேஸ்திரி போலீசில் புகார் மனு வடிவேலு பட பாணியில் ருசிகரம்
சேத்துப்பட்டு, டிச.6: கணவருடன் வாழ்ந்து வரும் எனது காதலியை மீட்டுத்தாருங்கள் என மேஸ்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பார்வதிபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சீனிவாசன்(25), கட்டிட மேஸ்திரி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு சீனிவாசனின் மனைவி வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. சீனிவாசனும், அவருடன் பணிபுரியும் அணைக்கட்டு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரும் நண்பர்களாக பழகி வந்தனர்.
இந்த பழக்கம் காரணமாக வாலிபரின் மனைவிக்கும், சீனிவாசனுக்கும் நெருக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியது. ஒருகட்டத்தில் வாலிபரின் மனைவி, தனது ஒரு வயது குழந்தையுடன் வீட்டைவிட்டு வெளியேறி சீனிவாசனுடன் சென்றுவிட்டார். இருவரும் வேலூரில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், தனது மனைவியை மீட்டுத்தரகோரி வேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் இருவரையும் அழைத்து விசாரித்தனர். அதில், ‘தான் சீனிவாசனுடன் தான் செல்வேன்’ என வாலிபரின் மனைவி அடம்பிடித்ததால், போலீசார் அவரை சீனிவாசனுடன் அனுப்பி வைத்தனர். அதன்படி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சீனிவாசன், தனது கள்ளக்காதலியின் குழந்தையை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கடந்த 30ம் தேதி தனது கணவரை வரவழைத்து அவருடன் சென்றுவிட்டார்.
தம்பதி, தங்கள் தங்கியிருக்கும் இடம் சீனிவாசனுக்கு தெரியக்கூடாது என தேவிகாபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி வந்தனர். அப்போது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே அந்த பெண் மீண்டும் சீனிவாசனுக்கு போன் செய்து தன்னை வந்து அழைத்து செல்லும்படி கூறினார். அதனடிப்படையில் அங்கு விரைந்த சீனிவாசனை, அந்த பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் தாக்கி பைக் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சீனிவாசன் போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதில் கணவருடன் வாழ்ந்து வரும் தன் காதலியை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடிவேலு பட சினிமா பாணியில் வாலிபர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீயை போல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

