கலசபாக்கம், நவ. 6: கலசபாக்கம் அருகே 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையேறிய ஈரோடு பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்தார். சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள் காட்சி தரும் தென் கைலாயம் என அழைக்கப்படும் பர்வதமலை திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் உள்ளது. 4,560 அடி உயரத்தில் உள்ள இந்த மலை உச்சியில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன், மல்லிகா அர்ஜுனேஸ்வரர் வீற்றிருக்கின்றனர். பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அதிகளவில் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்று முன்தினம் மாலை முதல் ஐப்பசி மாத பவுர்ணமி தொடங்கி நேற்று இரவு 7.29 மணிக்கு நிறைவடைந்தது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து மலையேறினர்.
அப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அனந்தம்பாளையம் கிராமத்தை சேர்ந்த எலக்ட்ரீஷியன் தனசேகர்(44) நேற்று பர்வதமலை அடிவாரத்தில் இருந்து மலையேறி சென்றார். அப்போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதை பார்த்த அருகில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த வனத்துறை மற்றும் கடலாடி போலீசார் மயங்கி விழுந்த பக்தரை மலையில் இருந்து டோலி கட்டி மலையடிவாரத்தில் கொண்டு வந்தனர். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தனசேகர் இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த தனசேகருக்கு செல்வி என்ற மனைவியும் சரண், ஜெகன், குகன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.
