செங்கம், டிச. 5: திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக யாரை நியமிப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து நியமிக்கப்பட்ட தமிழக மேலிட பார்வையாளர் நாராயண சாமி கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்தார். அப்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் பார்வையாளரை சந்தித்து பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக அவரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு காங்கிரசில் இளமைப் பருவம் முதல் கட்சிப் பணிகளில் தொய்வின்றி பணியாற்றியதால் மாநில செயற்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு தலைவர், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கத்தின் தேசிய அமைப்பாளர், பிறகு அதனுடைய மாநில அமைப்பாளர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியிருக்கிறேன். இத்தகைய பொறுப்புகளை ஏற்று அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறேன். புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதோடு, வேறு வகைகளில் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையின் ஆலோசனையின்படி கட்சிப் பணியாற்ற விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

